நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கோரும் மசோதா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை தாமே நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் இவ்விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்காக வலியுறுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டும், அவர் தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிய அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நீட்டுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு 100% ஆதரவு தருவோம் என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது