ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அலெக் கரே தாடை பந்துபட்டு ரத்தக்காயம் ஏற்பட்ட பின்னரும் பேட்டிங்கை தொடர்ந்தார்.
உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 9 (11) ரன்களில் வெளியேறினார்.
இதற்கிடையே வந்த ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதனால் 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. பின்னர் வந்த அலெக்ஸ் கரே ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 19 ரன்கள் இருந்தபோது, 8வது ஓவரின் கடைசி பந்தை ஆர்ச்சர் வீசினார். அந்த பவுன்சர் பந்து நேராக அலெக்ஸின் தாடையில் அடிக்க, அவரது ஹெல்மெட் தலையிலிருந்து கழண்டு எகிறியது.
அத்துடன் அலெக்ஸின் தாடையில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவக்குழு அலெக்ஸ் தாடைக்கு சிகிச்சை அளித்தது. அவர் பேட்டிங்கில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், ரத்தக்காயத்துடன் பேட்டிங்கை தொடர்ந்தார். பொறுமையுடன் விளையாடிய அவர் 70 பந்துகளில் 46 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஸ்டொயினிஸ் பூஜ்ஜியத்தில் அவுட் ஆகி சொதப்பினார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா போராடி வருகிறது.