அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 240-க்கும் மேற்பட்டவர்களில் 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 21 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பெண்கள் உள்பட 240-க்கும் மேற்பட்டோர் வாடிப்பட்டி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 38 பேரை விடுதலை செய்துள்ளதாகவும், மற்றவர்களையும் விடுவிக்க தயாராக இருப்பதாகவும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தெரிவித்தார். மேலும், அவர்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுடன் 2 காளைகளையும் போலீசார் விடுவித்தனர்.