உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கிவைத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7.19 மணி அளவில் கொடி அசைத்து துவங்கி வைத்தார். போட்டியின் முதல் நிகழ்வாக மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.
இன்றைய போட்டியில்,
களம் காணும் மாடுபிடி வீரர்கள் - 800
சீறும் காளைகள் - 1200
ஒரு சுற்றுக்கான உத்தேச நேரம் - 60 நிமிடங்கள்.
முதல் சுற்றில் - 50 வீரர்கள்
மேலும், போட்டியின் முதல் மூன்று காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கு ரத்த அழுத்தம், காயம், எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா, யாரேனும் மது அருந்தி இருக்கிறார்களா போன்ற முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. இதேபோல் காளைகளுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக அவற்றுக்கு ஊக்கமருந்து போன்றவை அளிக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு களத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு களம்காண வந்திருக்கும் காளைகளையும், அதனை காண வந்திருக்கும் பார்வையாளர்களையும், எதற்கும் அசரா மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மருத்துவர்களும், கால்நடை மருத்துவர்களும் அங்கு குவிந்துள்ளனர். முதலுதவி வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்பட்டு 1500 க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றும் காளைக்கும் காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதோடுகூட, சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
பொங்கலை முன்னிட்டு முதல் நாள் அவனியாபுரத்திலும், 2வது நாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைப்பெற்ற நிலையில் தற்போது 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டுள்ளது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நீங்களும் காணலாம்!