செய்தியாளர்: மருதுபாண்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெறும். அப்படி இவ்வருடமும் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கும் நிலையில், இதில் பங்கேற்பதற்காக காளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
அப்படி நிற்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் வாடிவாசல் அருகே வசிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி மீனாம்பாள் என்பவரது குடும்பத்தார் கடந்த 21 வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் மாட்டின் உரிமையாளர்களுக்கு உணவு டீ, காபி, சுண்டல் மற்றும் தின்பண்டங்கள் வழங்கி வருகிறார்கள்.
உணவளித்து உபசரிக்கும் அவர்களின் செயல் காளை உரிமையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவி மீனாம்பாள் பேசுகையில்... “ஜல்லிக்கட்டு போட்டி எங்கள் வீட்டின் அருகே நடைபெறுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் மாட்டின் உரிமையாளர்கள் சோறு தண்ணி இல்லாம பட்டினியோடு காத்திருப்பார்கள். நம்ம ஊருக்கு வந்தவங்க பட்டினியா போனா நல்லா இருக்காது
அதனால்தான் எங்க பாட்டி காலத்தில் இருந்து தற்போது வரை உணவு மற்றும் டீ, காபி வழங்கி வருகிறோம். மாட்டின் உரிமையாளர்களுக்கு அதை கொடுக்கும் போது அவர்களின் சிரிப்பே எங்களுக்கு போதுமானது. அதுவே ஒரு மன நிறைவை தருகிறது” என தெரிவித்தார்.
இவர்களின் செயல், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டை பெற்று வருகிறது.