திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்ததால் அஸ்வினியை கொலை செய்ததாக அழகேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அண்மையில் தமிழகத்தை உலுக்கிய பிரதான சம்பவங்களில் ஒன்று கல்லூரி வாசலில் அதுவும் பட்டப்பகலில் மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது. சென்னை கே.கே.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம் படித்துவந்த மாணவி அஷ்வினியை அழகேசன் என்ற இளைஞர் கல்லூரி வாசலிலே கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் பொதுமக்கள் அழகேசனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் சுயநினைவை இழந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சுயநினைவு திரும்பிய பின் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அவர், திருமணம் செய்து கொள்ள முடியாது என அஸ்வினி தெரிவித்ததால் கொலை செய்தேன் என கூறியதாக போலீசார் ஒருவர் கூறியுள்ளார். இதனிடையே அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் கூறும்போது, தன்னையும் கொலை செய்துவிடுமாறு அழகேசன் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அஸ்வினியை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே கல்லூரி வாசலுக்கு சென்று அஸ்வினியை கத்தியால் குத்தினேன் என்றும் அழகேசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தற்கொலை செய்ய முயன்ற போது, பொதுமக்கள் தன்னை பிடித்து அடித்ததாகவும் அழகேசனின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.