சென்னையில் தீபாவளி திருநாளில் பலரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது.
நாடு முழுவதும் காற்றில் கலந்துள்ள மாசுவின் அடிப்படையில் அதன் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காற்றின் தரக்குறியீடு 50- க்கும் கீழ் இருந்தால் தரம் சிறப்பாக இருப்பதாகவும் 51 முதல் 100-குள் இருந்தால் திருப்திகரமாக இருப்பதாகவும் கொள்ளலாம்.
காற்றின் தரம் 101-க்கு மேல் இருந்தாலே சுமார் என்றும், 201-க்கு மேல் இருந்தால் மோசம் எனவும் கணக்கிடப்படுகிறது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடிய நிலையில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் பெருங்குடி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது. பெருங்குடியில் காற்றின் தரம் 262ஆகவும், ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என பதிவானது. சென்னையில் எந்தப் பகுதியிலும் காற்று தரமானதாக இல்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.