இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நேற்றைய தினம் (6.10.2024) சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில், 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக பொதுமக்கள் முன்னிலையில் விமானப்படையின் திறனை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பார்க்க, சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் குவிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், மதியம் 1மணி வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலும், போக்குவரத்து குளறுபடியாலும், வெயிலில் காத்திருந்தவர்களில் சுமார் 230 க்கும் மேற்பட்டவர்களுக்கு மயக்கமும், இதில், 5 பேர் மரணமும் அடைந்தனர். இதனால், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவ்விடத்திற்கு சென்ற மக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் தமிழக அரசை சாடி இருந்தனர்.
இந்நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், திமுக எம்,பியுமான கனிமொழி இது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.” என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.
”வானத்தில் சாகசம். தரையில் சோகம்." என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
”விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு - குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.