செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகியோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 640 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது கண்ணின் இமைபோல விவசாயிகளை பாதுகாத்து வந்தோம்.
நாகை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின்போது அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து சாதனை படைத்தோம். வறட்சி வருகின்ற நேரமெல்லாம் நிவாரணத் தொகைகளை வழங்கியது அதிமுக ஆட்சியில் தான். டெல்டா விவசாயிகளின் நிலம் பறிபோகவிடாமல் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது அதிமுக அரசு. ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு” என்று இபிஎஸ் பேசினார்.