அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே சலசலப்பு - சத்தத்தால் அதிர்ந்த தலைமை அலுவலம்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே சலசலப்பு - சத்தத்தால் அதிர்ந்த தலைமை அலுவலம்
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே சலசலப்பு - சத்தத்தால் அதிர்ந்த தலைமை அலுவலம்
Published on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டநிலையில், கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் வெளியேறினார்.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்து உள்ளநிலையில், மீதமுள்ள 49 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்து அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மாலை 6.30 மணியில் இருந்து நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி வைத்திலிங்கம்., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்., ஜெயக்குமார்., சி.வி.சண்முகம் தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மனோஜ் பாண்டியன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து வரும் இந்த கூட்டத்தின் உள்ளே சலசலப்பு ஏற்பட்டது. வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்துவதற்காக, அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு வைத்திலிங்கம் இல்லாததால் அவர் திரும்பி வந்தார்.

வைத்திலிங்கம் வெளியேறும் போது அவரை சமாதானப் படுத்துவதற்காக அவரை பின்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தார். ஆனால் வைத்தியலிங்கத்தின் கார் நிற்காமல் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் வைத்தியலிங்கம் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார்.

அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாவது கட்ட உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து, அனைவரும் கலந்தாலோசனை நடத்தினோம். எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்ததை நீங்களே பார்த்தீர்கள். ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. வைத்தியலிங்கத்திற்கு வேலை இருந்ததால் சென்று விட்டார். மீண்டும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு இருந்த வாக்கு வங்கி தற்போதும் நீடிக்கிறது. ஒருபோதும் அமமுகவின் வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com