அதிமுகவில் இப்போதிருக்கும் தலைமையை ஏற்கவில்லை என்றும் கட்சிக்கு ஆளுமைமிக்க தலைவர் வேண்டும் என்றும் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, பிரபு ஆகிய 3 பேருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை.
கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதது பற்றி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் கேட்டபோது, ‘’ இந்தக் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. இப்போது இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ நாங்கள் தலைமையாக ஏற்கவில்லை. அதற்கு இந்த தேர்தலை காரணமாக வைத்துக்கொள்ளலாம். ஆளுமைமிக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் இயங்கிய கட்சி இது. அவர்களை போன்ற ஆளுமைமிக்க தலைமை பண்புள்ளவரைத்தான் தொண்டர்கள் ஏற்க முடியுமே தவிர, வேறு யாரையும் ஏற்க முடியாது. ’பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது. அவர்களிடம்தான் இவர்கள் போய் நிற்கிறார்கள்’ என்று பொதுமக்களே பேசுகிறார்கள். அதனால் ஆளுமை மிக்க தலைமை அதிமுகவுக்கு தேவை. அதைதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.