செய்தியாளர்கள்: சுபாஷ், ஐஷ்வர்யா, பழனிவேல்
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம். எதிர் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் என தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு, டிடிவி தினகரன், ஆ.ராசா, செல்வகணபதி உள்ளிட்டவர்களின் வேட்புமனு நிறுத்தி வைப்பு என கொளுத்தும் கோடை வெயிலில் தேர்தல் களம் சூடேறியது.
அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவையோ பிரதமர் மோடியையோ பெரிய அளவில் விமர்சிப்பது இல்லை. இதனால் அதிமுக, பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அதிமுகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ, சிவி.சண்முகம், கேபி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் பேசியதை விரிவாக பார்க்கலாம்...
மதுரை செல்லூர் பகுதியில் அதிமுக வடக்கு தொகுதி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியபோது....
”பாரதிய ஜனதா கட்சி மதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்கிறது, தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை போல ஒரு மாயை உருவாகி இருக்கிறது, தமிழகத்தில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கு தான் மக்கள் செல்வாக்கு உள்ளது" என்று பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம் கோவை குளத்துப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”யார் நம்முடைய போட்டி? யார் நமக்கு எதிரி? பாஜக வாட்ஸ் அப், செல்போனில் ஐ.டி.விங் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். பாஜக கணக்கிலே கிடையாது. அவர்களைப பற்றி கவலையும் இல்லை. போட்டியே இல்லை. வாட்ஸ் ஆப்பிள், சமூக வலைதளங்களில் மட்டும் பேட்டி கொடுத்தால் வந்துவிட முடியுமா? ஒவ்வொரு ஊரில் என்ன வாக்கு வாங்குவார்கள்?.
பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். 10 – 15 சதவீத வாக்கு வாங்கினால் வெற்றிப்பெற முடியுமா?. மற்ற பக்கம் வெற்றிபெறலாம். ஆனால், தமிழகத்தில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி” என பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
விழுப்புரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது, “மாநிலத்தைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, மக்களைப் பற்றி கவலைப்படாத பாஜக அரசு. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கி வருகின்றது. பாஜக-வால் நாடு இன்று அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ‘மீண்டும் மோடி, மீண்டும் மோடி’ என்கிறார் அண்ணாமலை. நாங்கள் சொல்வது என்னவெனில், ‘வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி’ என்பதுதான்.
இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. இப்போதே யாரும் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. பாஜகவிற்கு எதிர்ப்பு என தெரிவித்தால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை செய்வார்கள். இவைகள்தான் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள். பாஜக இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வரவில்லை. நம்முடைய தயவால், நாம் போட்ட பிச்சை நாலு எம்.எல்.ஏ-க்கள்.
ஆனால், அனைத்து நிறுவனங்களும் அச்சுறுத்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. விழுப்புரத்தில் கூட என்ன ஆகிற்று. அண்ணாமலை வருகிறார் எனக் கூறி, ஒரு கடையையாவது நடத்த விட்டார்களா?. எல்லோரிடத்திலும் வசூல் செய்தனர்” என்று பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
கிருஷ்ணகிரியில் வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “ஜெயலலிதா தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது மோடியா, லேடியா என்று கூறி ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது மோடியை எவ்வளவு தூரத்தில் ஜெயலலிதா வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், அப்படிப்பட்ட மோடியை, டிடிவி தினகரன் சந்தர்ப்பவாதத்துக்காக, தன்னை பாதுகாத்துக் கொள்ள மோடியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மோடியை ஜெயலலிதாவுடம் ஒப்பிட்டு நாடகம் நடத்துகிறார். நாடு முழுவதும் பாஜகவினர் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்கள் அரசியல் விமர்சகர்கள் மூலமாக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்கள் மனதில் திணித்து வருகின்றனர்.
கோவை மக்களவைத் தேர்தல் முடிவில், பாஜக தமிழகத்தில் எத்தனாவது இடத்திற்குச் செல்ல இருக்கிறது என்பதை மக்கள் தெரிவிப்பார்கள். நாடு முழுவதும் மோடி அலை என்பது, மோடியுடன் சேர்த்து அவர்களின் அடிவரிடிகள் தான் தூக்கிப் பிடித்துள்ளனர். மோடியின் அடிவரிடிகளாக இயங்கும் ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொறுப்பேற்ற பிறகு அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார். அவர் சொல்லும் கருத்துகள் உண்மைக்கு மாறாக உள்ளது. அண்ணாமலை போன்ற அசிங்கமான அரசியல் மனிதரை தமிழகத்தில் பார்க்க முடியாது என்பதை நீங்களே உணவீர்கள்” என தெரிவித்தார்.
அதிமுகவின் மற்ற தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த போதிலும், முன்னாள் முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் பாஜக அரசு மீதான விமர்சனங்களை தவிர்த்து வருவதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முழுக்க முழுக்க திமுகவேயே விமர்சனம் செய்தார். இதனை திமுகவும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தான் பாஜக மீதான எதிர்ப்பு அலை வாக்குகளை அதிமுக பெற்றுள்ளதாக இல்லையா என்பது தெரியும். ஏனெனில் கடந்த தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக முழுமையாக கைப்பற்றியது. தற்போது அதிமுக அதனை முன்னெடுக்கும் போதும் அக்கட்சிக்கும் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளது.