“பாஜகவிற்கு தைரியம் இருந்தா.. தில் இருந்தா..” - பாஜக அமைச்சர்களைக் குறிப்பிட்டு கே.பி.முனுசாமி சவால்

“உங்களது ஆட்சி 17 மாநிலங்களில் நடக்கிறது. மத்திய அரசு விருது கொடுத்தால் தமிழ்நாட்டிற்குத்தான் கொடுக்கிறது. அதில் பல அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் ஏன் அதை வாங்கமுடியவில்லை” கே.பி.முனுசாமி கேள்வி
கேபி முனுசாமி
கேபி முனுசாமிpt web
Published on

அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட நாள் முதல் அதிமுக தலைவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு பல்வேறு வகையில் விமர்சித்து வந்தனர். ஆனால் அதேநேரம் பாஜக தரப்பிலிருந்து தேசிய அளவிலோ அல்லது மாநிலத்திலோ கூட கடினமான சொற்கள் எதையும் அதிமுக மீது யாரும் உபயோகித்ததில்லை. அண்மையில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியும்கூட தமிழகத்தில் நல்லாட்சி தந்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதான் என்று கூறிவிட்டு சென்றார்.

"அளவற்ற அன்பைப் பெற்றேன்" -பிரதமர் மோடி
"அளவற்ற அன்பைப் பெற்றேன்" -பிரதமர் மோடி

இதுபோன்ற காரணங்களால், அதிமுக பாஜக இடையே மறைமுக கூட்டணி இருக்கிறதென்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அதிமுக தலைவர்கள் பாஜகவை கடுமையாக சாடத்தொடங்கியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரியில் நடைபெற்றது. இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எல்.முருகனை ஏன் ராஜ்யசபா எம்.பி. ஆக்கினீர்கள்? தேர்தலில் நிற்கவைக்க வேண்டியதுதானே... ஏன் நிற்கவைக்கவில்லை? நின்றால் ஜெயிக்கவைக்க முடியாது. அது உங்களுக்கே தெரிகிறது. பின் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்?

கே.பி. முனுசாமி
கே.பி. முனுசாமி

அண்ணாமலையிடமும், பிரதமரிடமும் கேட்கிறேன்... உங்களுக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என சொன்னால், இரண்டு மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். இருவரில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இன்னொருவரும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது நீங்கள் நிற்க வையுங்கள். பாஜகவிற்கு தைரியம் இருந்தால், தில் இருந்தால், தமிழக மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் இந்த இரு அமைச்சர்களையும் தமிழகத்தில் நிறுத்தவையுங்கள். அப்போது தமிழக மக்கள் உங்களுக்கு எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிந்துகொள்வீர்கள். இது திராவிட மண்.

சீரழித்துவிட்டோம் என சொல்கிறீர்களே, தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது. சுகாதாரம், கல்வி, நீர்மேலாண்மை, விவசாயம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

உங்களது ஆட்சி 17 மாநிலங்களில் நடக்கிறது. அப்படியிருந்தும் மத்திய அரசு விருது கொடுத்தால் தமிழ்நாட்டிற்குத்தான் கொடுக்கிறது. அதில் பல அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் ஏன் அதை வாங்கமுடியவில்லை? நாங்கள் வாங்கினோமே. ஐபிஎஸ் ஆஃபிசர், மெத்தப்படித்தவர், அறிவாளி என சொல்லுகிறீர்கள்... இது தெரியாதா?” என கேட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com