இந்திய அளவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திய ஒரே இயக்கம் அதிமுகதான் என்று சேலத்தில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக அமைப்பு தேர்தல் இரண்டாம் கட்டமாக 36 மாவட்டங்களில், இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெற உள்ளது. கோவை கழக மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆணையாளர்களாக கலந்துகொள்ள உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது,..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் கழக அமைப்பு தேர்தலை முதன்முதலில் நடத்தி முடித்தது சேலம் புறநகர் மாவட்ட கழகம்தான். அதற்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், திமுகவை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி கொடுத்ததற்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக நடத்திய இந்த ஆர்பாட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். அடித்தட்டு மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தான் எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கினார்.
அவரது வழியில் பல்வேறு சிரமங்களுக்கும் இடையில் தனது உயிர் இருக்கும்வரை அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா என்றும் குறிப்பிட்ட அவர், தனக்கு பின்னும் அதிமுக 100 ஆண்டுகள் வாழும் என்று தெரிவித்தவர் ஜெயலலிதா. அதிமுக ஜனநாயக கட்சி. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்திய அளவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலை நடத்தியது அதிமுகதான் என்றார்.
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் போல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, ஒன்னரை கோடி தொண்டர்களின் உறுப்பினர் பட்டியலை வெளியிட்டுள்ளோம் என்று கூறியதுடன், இரண்டாம் கட்ட தேர்தலை விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையான முறையில் நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.