ஆத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது என பேசினார்.
அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கு பேசும்போது.
"கொரோனா காலகட்டம் என்பதால் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 சட்டமன்ற தொகுதியில் வெற்றியை பெற்றுத்தந்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. இந்த பொய் வழக்குகளுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. எம்ஜிஆர் இருக்கின்ற போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அதிமுக.
தற்போது நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதா? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தியதாகவும் தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்தது என விமர்சனம் செய்தார்.