அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம்: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம்: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம்: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது... கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.

திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாகவும்; வருகின்ற 2026 ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதன் மூலம் உண்மை தர்மம் நீதி வென்றுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

ஏற்கெனவே தொகுதிகளில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்னைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தனது தொகுதி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்னைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com