அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் 4 நாட்களாக நடைபெற்று வந்தன. இப்பணிகளை அமைச்சர்கள் க.பாண்டியரஜன், பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். இதில் கலந்துகொள்ள 2 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து இந்தப் பொதுக்குழுவின் விவாதிக்கப்படலாம்.
கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் நீதிமன்றத் தடை காரணமாக பேனர்களும், கட்சிக்கொடிகளும் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக சாலையெங்கும் வாழைமரங்கள் கட்டி வைக்கப் பட்டுள்ளன.
திருமண மண்டபத்தின் நுழைவுவாயில், அதிமுக தலைமை அலுவலகத்தைப் போலவும், யானைகளின் பிரமாண்ட உருவங்கள் வைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்துக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.