தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து அதிமுக-வினர் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் பேரவையில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். `சட்டப்பேரவையில் பேச அனுமதி வேண்டும்’ எனக் கோரி அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுவந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அவைக்குள்ளேயே அமர்ந்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சபாநாயகர் தர்ணாவை தடுக்க முயன்றபோதிலும், அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையிலிருந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதிமுக வெளியேற்றம் குறித்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் விளக்கமும் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தின்படி, `தீர்மானங்கள் மீதான பதிலுக்கு பிறகு, அதிமுகவினருக்கு அனுமதி தருகிறேன் என்று சொன்னேன். எல்லா மதத்தினருக்கும் சம வாய்ப்பு கொடுத்து வருகிறது தமிழக அரசு; விருப்பு வெறுப்பில்லாத அரசு இந்த அரசு. மதத்தை வைத்து அரசியல் நடத்தி கட்சியை வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கவில்லை. போதுமான அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.