ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஓ.பி.எஸ்., எப்படி தலைவராக உருவாக முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வதிற்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், “எடப்பாடி பழனிசாமி எடுத்துச் செல்லும் அனைத்து முயற்சிகளுக்கும் உடன்படாமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்படுத்தி, ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்பு 7 முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டவர் ஓ.பி.எஸ்., இன்னும் எத்தனை முறை நிலைப்பாட்டில் மாறுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஓ.பி.எஸ். எந்த நிலைப்பாட்டையும் உறுதியாக எடுத்ததில்லை. ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள, ஓ.பி.எஸ்ஸை நம்பி செல்ல முடியாது என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஓபிஎஸ் எப்படி தலைவராக உருவாக முடியும்?. துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தொண்டர்கள் துணிந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை ஓ.பி.எஸ். மறந்துவிடக் கூடாது” என மிரட்டும் பாணியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெரியகுளத்தில் இருந்து கொண்டு தொண்டர்கள் ஆதரவு கொடுப்பதுபோல் மாய தோற்றத்தை உருவாக்குவது என்பது, ஆண்டிகள் மடம் கட்டுவது போல் ஆகுமே தவிர செங்கோட்டையாக இருக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.