இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அண்ணாமலை கருத்து குறித்து விவாதிக்க வாய்ப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார். மேலும் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அதிமுக மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதேபோல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளின் நிலை குறித்தும், நிர்வாக வசதிக்காக கட்சிக்குள் பிரிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களை ஒரே மாவட்டமாக இணைப்பது, சில புதிய மாவட்டங்கள் உருவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் பேச வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.