அதிமுகவில் தற்போது நிலவும் அசாதரண நிலைக்கு காரணமானவர்களுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் என்றும், யாராலும் தன்னை நீக்க இயலாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் மோதலாக வெடித்துள்ளது. கடந்த ஜூன் 14-ம் தேதி, அதிமுக பொதுக்குழு தொடர்பாக விவாதிக்க நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பற்றவைக்கப்பட்ட ஒற்றைத் தலைமை தீப்பொறி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் களமிறங்கி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றத் தயாராக, ஏற்கெனவே பேசிமுடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு இரவோடு இரவாக நீதிமன்றத்தில் தடை வாங்கியது.
பெரும் பரபரப்புக்கு இடையே, கடந்த 23-ம் தேதி, வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டத்தில், ஏற்கெனவே பேசி முடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக அறிவித்தார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். மேலும் ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இந்தத் தீர்மானங்கள் சேர்த்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அப்போது ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே கூச்சல் குழப்பங்கள் நிலவியதால் முடிவு எட்டப்படாமல், பொதுக்குழு வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் எனவும்அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில், ஆரம்பம் முதலாகவே ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில் அன்றிரவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓ. பன்னீர் செல்வம் டெல்லி சென்றார். பின்னர் சென்னை திரும்பிய அவர், அங்கிருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டநிலையில், ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “உயிரிலும் மேலான அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர். தொண்டர்களோடு என்றும் இருப்பேன். தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பேன்” என்று கூறினார்.
மேலும் அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழல், யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும் எனவும், அதற்கு மக்கள் தண்டனை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஓ.பி.எஸ். போன்ற தொண்டரை பெற்றது பாக்கியம் என அம்மா கூறினார்கள். அப்படிப்பட்ட என்னை யாராலும் அம்மாவின் இதயத்தில் இருந்து நீக்க இயலாது. என் எதிர்காலத்தை மக்களும் தொண்டர்களும் நிர்ணயிப்பார்கள் என்று தெரிவித்தார்.