விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டில் தவெக தலைவர் விஜய், திராவிட மாடல் என்று கூறி மக்களை ஏமாற்றுவதாக ஆளும் திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார். பாஜகவை மறைமுகமாகச் சாடினாலும், அதிமுகவைப் பற்றி எதுவும் பேசவில்லை.
அதே நேரத்தில் அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரை தமிழ்நாட்டின் ஆகப்பெரும் தலைவர்களில் ஒருவர் என்று புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்கும்போது, நடிகர் விஜய்யின் கட்சி கொள்கைகளுடன் அதிமுகவின் கொள்கைகள் ஒத்துப்போவதாக தெரிவிக்கிறார்கள்.
தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் அதிமுகவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல், மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு கிடைத்த பெரும் ஆதரவைப் பார்த்து தற்போது அதிமுகவிற்குள் ஒரு உற்சாகம் பிறந்துள்ளதாகவும் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான அதிமுக மூத்த நிர்வாகிகள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக்கழக கொள்கைகள் குறித்தும் விஜய் குறித்தும் எந்தவித விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என விவாதங்களில் பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடும் ஐ டி விங் நிர்வாகிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வரும் ஆறாம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், கூட்டணிக்கு சாதகமான கட்சிகள் குறித்தும், 2026 தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்கக் கோரும் விவகாரங்கள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.