ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களிலும், திமுக 2 ஆயிரத்து 99 இடங்களிலும் வென்றன.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஊராட்சி தேர்தலில் 27 மாவட்டங்களில் 26 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும் பிரச்னை காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.
அதிமுக 14 மாவட்ட ஊராட்சிகளிலும் திமுக 12 மாவட்ட ஊராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் 314 ஊராட்சி ஒன்றியத்தில் 285 ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில், 150 இடங்களில் அதிமுகவும் 135 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
தலைவர் பதவிகளுக்கான தேர்தல் முடிவடைவதையடுத்து துணை தலைவர்களுக்கான தேர்தல் இன்று மாலை நடைபெறும் எனத் தெரிகிறது.