நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23ம் தேதி அறிவித்தது.
தொகுதிப் பங்கீட்டு குழுவில் 5 பேரும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 7 பேரும் அதிமுகவின் பரப்புரை பணிகளுக்கான குழுவில் 6 பேரும் இடம்பெற்று உள்ளனர். கூட்டணி குறித்து இன்னும் எந்தப்பேச்சும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ரூ.25 ஆயிரம் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விருப்ப மனுவை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.