தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தோல்வியடைந்திருந்த நிலையில், தோல்விக்கு எந்தக் கட்சி காரணம் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிவந்த நிலையில், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பற்றிய கேள்வி உருவானது. இந்த கேள்விக்கு சமூகவலைத்தளம் வழியாக பதில் தெரிவித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
தனது பதிவில், “பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அஇஅதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜகவுடனான கூட்டணியால்தான், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததோம் என்றும், அதனாலேயே அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது என்றும் கூறியிருந்தார் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
அவருக்கு எதிர்க்கருத்து தெரிவிக்கும் விதமாக, ‘உங்களால்தான் என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது’ என ட்வீட் செய்திருந்தார் பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன்.