சமீபத்தில், பத்து தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், சம்பந்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த விதமே சட்டவிரோதம் என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், தற்போது மீண்டும் மற்றொரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில், நாரணபுரத்தில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான மகேஷ்வரி பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. அரசிடம் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 42 அறைகள் உள்ளது.
இந்நிலையில், இன்று காலை 6.15 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பட்டாசு ஆலையில் இருந்த இரண்டு அறைகள் தரைமட்டமாகியுள்ளன. ஆனால், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வருவதற்கு முன்பு இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் , வெடி விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,நேற்று தயாரித்த பட்டாசுகளின் மீதமிருந்த வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்தபோது வேதியியல் மாற்றத்தால் வெடித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில், செங்கமலம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் தடம் மறைவதற்குள், இன்று மீண்டும் மற்றொரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதி வசிக்கும் மக்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.