சென்னைக்கு நாய்க்கறி கொண்டுவரப்பட்டதாக பரவிய புரளியால், ஆட்டிறைச்சி விற்பனை குறைந்துவிட்டதாக இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் அலி, ராஜஸ்தானில் வளர்க்கப்படும் செம்மறி ஆடு வகையை, நாய் என அதிகாரிகள் சிலர் திட்டமிட்டே வதந்தி பரப்பிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
உரிய விசாரணை நடத்தாமல் ஊடகங்களுக்கு தவறான தகவலளித்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறைச்சி விற்பனையாளர்கள் கேட்டுக் கொண்டனர். வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிகளைக் கொண்டுவர, தமிழக அரசு உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என தவறான வதந்தி பரப்பப்பட்டதால், வியாபாரம் குறைந்து இறைச்சி தொழிலை நம்பி இருக்கும் பத்தாயிரம் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. உடனடியாக தவறான தகவலை பரப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சங்க பிரதிநிதிகள், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
“சென்னையில் உள்ள 4 அறுவை கூடங்களில், வழக்கமாக தினசரி 4000 ஆடுகள் அறுவடை செய்யப்படும், ஆனால் கடந்த 17ம் தேதி இந்த வதந்தி பரவியது முதல் வேறும் 1000 ஆடுகள் மட்டுமே அறுக்க படுவதால் நாள் ஒன்றிற்கு 3000 ஆடுகள் வரை தேக்கமடைந்துள்ளன” என்று இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலர் அப்துல் அலி கூறினர்.