8 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன.
கொரோனா பரவல் தொடங்கியவுடன், மெரினா கடற்கரை கடந்த மார்ச் 21ஆம் தேதி மூடப்பட்டது. பொதுமுடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்தபோதிலும், மெரினாவில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடற்கரையை திறப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
8 மாதங்களுக்கு பிறகு அணை உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலாங்கரை, திருவான்மியூர், மாமல்லபுரம் கோயில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்காங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கு வருவோர் நுழைவுக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.