ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்த வால் நட்சத்திரத்தை, நமது தலைமுறையும், பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மர்மங்களுக்கும், வியப்பிற்கும் தட்டுப்பாடு இல்லாத நமது பிரபஞ்சத்தில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அதில் ஒன்றாக ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காடுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்த, நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்ததாக சொல்லப்படும் பச்சை வால்நட்சத்திரம் ஒன்று, தற்போது பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு மிக அருகில் கடந்து வருகிறது. இந்நிலையில், இதன் நகர்வை கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்த வால் நட்சத்திரம்
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குகைகளில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்ததாக சொல்லபடும் இந்நட்சத்திரம், ஏற்கனவே பூமியை கடந்த பல்வேறு வால் நட்சத்திரங்களை விட இது மாறுபட்டு, கண்கவர் நீலம் கலந்த பசுமை நிறத்தில் மின்னுவதாலும், அதிகம் ஒளிரும் தன்மைகொண்ட அதன் தங்க நிற, நீண்ட வாலுமே காரணம்.
2022 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்டது
இது மற்ற வால் நட்சத்திரங்களை போல, பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்படவில்லை. கடந்த 2022 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகளான, ப்ரைஸ் போலின் மற்றும் ஃப்ரான்க் மாசி என்பவர்களால் கண்டறியப்பட்டது. கண்டறிந்த நாள் முதல், அதன் நகர்வின் துல்லியத்தையும், சுற்று வட்ட பாதையையும் ஆய்வு செய்து, இது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 12 அன்று சூரியனுக்கு மிக அருகில் வருவதையும், இன்று பிப்ரவரி ஒன்றாம் தேதி பூமியின் வட்டப்பாதைக்கு மிக அருகில் வருவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
திடீரென ஓராண்டு காலத்திற்குள் புதிய வால் நட்சத்திரம் ஒன்று, சூரிய குடும்ப அமைப்பிற்குள் வேகமாக வருவதால் உலகில் உள்ள வான் இயல் விஞ்ஞானிகள் அனைவரும், ஆர்வத்துடன் உற்று நோக்கி புகைப்படங்களையும், இயங்கு படங்களையும் எடுத்து வருகின்றனர்.
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தொடர் கண்காணிப்பு
இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தின் கிளை ஆய்வகமான கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் கடந்த மூன்று நாட்களாக இந்த வால்நட்சத்திரத்தை தொடர்ந்து கண்கானித்தும், ஆய்வுகள் செய்தும் வருகின்றனர். இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தின் லடாக் நகரத்தில் அமைந்துள்ள, ஹான்லே தொலைநோக்கி உதவியுடன், புகைப்படம் எடுத்தும் வெளியிட்டுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில், மழைக்கான மேக மூட்டங்கள் சூழ்வதால், நிறநிரல்மானி தொழில் நுட்ப தொலை நோக்கி உதவியுடன், கண்காணித்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
வானம் மேக மூட்டம் இல்லாமல், தெளிவாக இருக்கும் இடங்களில் இருந்து, சூரியன் மறைவிற்குப் பின்னர் வடக்கு திசையில் வடதுருவ நட்சத்திரத்திற்கு மேலே இந்த அழகிய பச்சை வால் நட்சத்திரம் இன்னும் ஒரு வார காலத்திற்கு, தொடர்ந்து தென்படும் என்றும், தொலை நோக்கிகள் உதவியுடன், இந்த வால் நட்சத்திரத்தை காணமுடியும் எனவும், விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வான் இயல் ஆய்வாளர்களால் ஆர்வத்துடன் கண்காணிக்கப்படும் இந்த பச்சை வால் நட்சத்திரத்தை, நாம் இப்போது பார்க்காவிட்டால், இன்னும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு அதை யாராலும் பார்க்க முடியாது என்பதே உண்மை.
கொடைக்கானல் நிருபர் - மகேஷ் ராஜா