ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். நெடுவாசல் கிராமத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும், மீத்தேன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 174 நாட்களாக அந்த கிராமத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயப்பணிகளில் ஈடுபடும் பொருட்டு போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக்குழுவினர் இன்று அறிவித்தனர். ஓ.என்.ஜி.சி நிறுவனமும், மத்திய அரசும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முனைந்தால், அடுத்தக்கட்ட போராட்டங்கள் வீரியத்துடன் தொடங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.