கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் தேவை கருதி தேர்வுகள் முடியும் வரை விடுதிகள் தொடர்ந்து இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
10, 11-ஆம் வகுப்புகள் மற்றும் +2 பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனவும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.