வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்போல் ஆகி விடக் கூடாது என்பதற்காக காத்திருந்து, பூந்தமல்லி அதிமுகவினர் பொறுமையாக வெற்றியை கொண்டாடினர்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிட்டனர். அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். இதையடுத்து அதிமுகவினர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதன் பிறகு முன்னிலை நிலவரம் அப்படியே மாறி திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து திமுகவினர் வெற்றியை கொண்டாடினர். இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்து அதிமுக வேட்பாளரே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் பூந்தமல்லி அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டத்தை சற்று தள்ளி வைத்தனர்.
இதற்கு முக்கிய காரணம் வேலூர் நாடாளுமன்ற தேர்தலின்போது வெற்றி கொண்டாட்டம் பாதியில் முடிந்ததால், அதுபோல் தற்போதும் ஆகி விடக்கூடாது என்ற அச்சமே எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து முன்னிலை நிலவரம் அதிகமாக வந்ததையடுத்து பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொறுமையாக வெற்றியை கொண்டாடினார்கள்.