அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவல் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறியிருந்தார். பிறகு உடல்நிலை மோசமாதனால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் மதுசூதனன் உயிர்பிரிந்தது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறையிடம் பேசியபோது, ‘’கழகத்துக்கு அவைத்தலைவராக இருந்து நற்பணியாற்றியவர். 1972ல் எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கியபோது, வடசென்னை பகுதியில் கழகத்தை வளர்த்தவர் என்ற பெருமை மதுசூதனனையே சேரும். அவருடைய உழைப்பையும், தியாகத்தையும் யாராலும் மறக்கமுடியாது. வடசென்னைக்கென்று அமைச்சர்களே இல்லாத காலகட்டத்தில், அண்ணன் மதுசூதனனையும், என்னையும் அமைச்சர்களாக்கி அழகுபார்த்தார். நாங்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு வடசென்னையை மேம்படுத்த பல திட்டங்களை கொண்டுவந்ததை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். அரசியலிலும், தனிப்பட்ட முறையிலும் வயதில் மூத்தவராக இருந்தாலும் ஒரு நல்ல நண்பராகவும், அண்ணனாகவும் இருந்திருக்கிறார். அவருடைய மறைவு கழகத்துக்கு பெரும் இழப்பு’’ என்று கூறினார்.
அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி பேசியபோது, ’’மதுசூதனனின் இறப்பு இயக்கத்துக்கு மாபெரும் இழப்பு. எம்ஜிஆரின் தீவிரத்தொண்டரான இவரை ஜெயலலிதாவும் பாதுகாத்து வைத்திருந்தார். அடிமட்ட தொண்டனுக்குரிய தகுதிகளோடு அரசியல் பணியாற்றியவர் அவர். 1973 காலகட்டத்தில் இருவரும் தொகுதி அமைப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறோம். தேர்தலில் தோல்வியுற்ற அவரை எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளராக எம்ஜிஆர் அவரை நியமித்தார். ஒரு தொண்டனுக்கு பிரச்னை என்றாலும் இரவு பகல் பாராமல் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிடுவார். கட்சிக்கு ஒரு தூணாக இருந்த மதுசூதனின் இறப்பு கட்சிக்கு பெரிய இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்’’ எனக் கூறினார்.