அதிமுகவில் புதிதாக உருவெடுத்திருக்கிறது ஒற்றைத் தலைமை என்னும் புதிய பிரச்னை. ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சிக்குள்ளேயே கருத்து மாறுபாடு நிலவும் நிலையில், ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக தலைமை சந்தித்து வந்த சிக்கல்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.
1. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவரை, கட்சிக்குள் எந்தவித சச்சரவும், சண்டையும் வரவே வராது. அது ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்கியது.
2.ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்க, கட்சிப் பொறுப்பை கைப்பற்றினார் சசிகலா. பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் தற்காலிக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. அடுத்ததாக முதலமைச்சர் பதவியை நோக்கி சசிகலா காய்நகர்த்த, ஓ.பன்னீர்செல்வமோ சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இந்த நேரம்பார்த்து வந்ததுதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு.. சசிகலா சிறைக்கு செல்ல நேரம் வந்தது. காலத்தின் கட்டாயத்தால், டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார்.
4. சசிகலா சிறைக்குச் சென்றபின் மீண்டும் அதிமுகவிற்குள் சலசலப்பு. டிடிவி தினகரன் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் வெடித்தது.
5. அதேசமயம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மீண்டும் ஒன்றுசேரும் விதமாக பேச்சுவார்தை நடத்தியது. இதில் வெற்றியும் கிடைத்தது.
6. ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்று சேர்ந்தனர். அதிமுகவிற்கு இரட்டை தலைமை எனும் பதவி கொண்டுவரப்பட்டது. அதாவது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர்
7. இதனையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.கவில் ஜெயலலிதா வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், ஜெயலலிதா மறைந்தவுடன் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அந்தப் பதவியின் அடிப்படையில் சசிகலா செய்த நியமனங்களும் செல்லாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது டிடிவி தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது.
8. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா. ஆனால் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கே ஒதுக்கியது நீதிமன்றம்.
9. சிறையில் இருந்து வெளியேவந்த சசிகலா அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவது உண்டு. அதில் அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கை வெளியிடுகிறார்.
10. அதிமுகவில் மீண்டும் தலைமை விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் வர வேண்டும் என்று ஒருதரப்பும், ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பது நாளைய பொதுக்குழு கூட்டத்தில்தான் தெரியவரும்.