செய்தியாளர்: ரமேஷ்
திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில், சென்னை ராயபுரத்தில் உள்ள பஷ்யம் நாயுடு தெருவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, படுத்தால் வரி என எல்லாவற்றிற்கும் வரி வசூல் செய்து மக்களை கொடுமை படுத்தும் செயல் நடக்கிறது. இதனைக் கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம் சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போலதான் இந்த அரசு செயல்படுகிறது. ஆம்புலன்ஸ், குடிநீர், கழிவறை வசதி என அந்நிகழ்ச்சியில் எந்த வசதியுமே இல்லை. போக்குவரத்தும் சீராக இல்லை. விமான சாகசம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. நல்ல விஷயம். ஆனால் அதற்கான ஏற்பாடு தமிழ்நாடு அரசு சரியாக செய்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.
மக்களால் 5 கி.மீ. எப்படி வெயிலில் நடக்க முடியும்...? அந்த இடங்களில் பேருந்து விட்டார்களா? அங்கு சென்ற ஒவ்வொருவரும் சபித்துவிட்டு போகிறார்கள். ட்விட்டரில் போட்டது நான் எடுத்த வீடியோ. வந்தவர்களில் நிறைய பேர் ஏர் ஷோவே பார்க்கவில்லை. அந்தளவுக்கு சிரமப்பட்டார்கள்.
ஆனால் இதுபற்றி பேசும்பொழுது, மா.சுப்பிரமணியன் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பேசுகிறார்கள். ‘இப்படி பேசுகிறோமே... மக்கள் என்ன நினைப்பார்கள்’ என யோசிக்காமல் பேசுகிறார். ஐவரும் உயிரிழந்ததற்கு, ‘குடிநீர் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தனர்’ என சொல்கிறார். அரசு ஒரு பக்கம் இருந்தாலும், மாநகராட்சிதான் இதற்கு பொறுப்பு. இதற்காக 5 கோடி ரூபாய் செலவு செய்திருந்தால் என்ன ஆகிவிடும்? மெரினா சாலை பெரியது. நிறைய குறுக்கு சாலைகளை கொண்டிருக்கிறது. அதையெல்லாம் பயன்படுத்தி போதுமான அளவு தண்ணீர், கழிவறை வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யவில்லை அவர்கள்.
மா.சுப்பிரமணியத்திடம் கேட்கிறேன்..
‘ஆம்புலன்ஸ் எத்தனை இடத்தில் இருந்தது.?
தண்ணீர் டேங்க் எத்தனை இடத்தில் இருந்தது?
தற்காலிக கழிவறை எத்தனை இடத்தில் இருந்தது?
எவ்வளவு பேருந்துகள் கொண்டுவந்தீர்கள்?’
அனைத்திற்கும் வீடியோ போடுங்கள் இதை சும்மா விடக்கூடாது.
இன்னும் மக்களிடம் இருந்து துயரம் நீங்கவில்லை. அவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடு போதாது. 10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் கொடுக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்ய வேண்டும்.
இந்த மெரினாவே வருவாய் துறைக்குதான் சொந்தம். ஆனால் அந்த வருவாய் துறைகூட மக்களை அவர்கள் ஒருங்கிணைக்கவில்லை. உலகிலேயே 2 வது பெரிய கடற்கரை மெரினாதான். அதில் 3 ல் ஒரு பங்கை ஆக்கிரமிப்பு செய்தது அவர்கள் (திமுக அரசை குறிப்பிட்டு) குடும்பம்தான். அவர்கள், அவர்களது குடும்பம், அதிகாரிகள் மட்டும் ஏர்கூலரோடு இருந்தார்கள். மக்களை மட்டும் சாகடித்துவிட்டனர்.
ஊரே பற்றி எறியும் போது ஒருவன் சுருட்டுக்கு நெருப்பு கேட்டானாம். அது போல் இருந்தது இவர்கள் செய்தது. மக்களை துன்புறுத்தியதுதான் மிச்சம். இதை கேள்விகேட்டால், இறப்பை வைத்து அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். அந்த அவசியம் எங்களுக்கு இல்லை. நிர்வாகத்திறனில் அதிமுக ஹீரோ, திமுக ஜீரோ” என்றார்.
தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதியின் உடை குறித்து விமர்சித்த ஜெயக்குமார், “நானும் வீட்டில் டி.சர்ட் போடுவேன். விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது டி.சர்ட் போடுவேன். அது தனியார் நிகழ்ச்சி. டி.சர்டை நான் விரும்புவேன். ஆனால் அரசுக்கு என்று நடைமுறைகள் உள்ளது. துணை முதல்வர் டி.சர்ட் போடுகிறார்.
முதன்மை செயலாளரோ, செயலாளரோ டி.சர்ட் போட்டால் உதயநிதி ஒப்புக்கொள்வாரா? தமிழன் பண்பாடே வேஷ்டிதான். டி.சர்ட்டை உங்கள் கட்சி நிகழ்ச்சிக்கு போட்டு செல்லுங்கள். முகத்தில் கூட கட்சி சின்னத்தை வரைந்துகொள்ளுங்கள். ஆனால் அரசு நிகழ்ச்சியில் இப்படி செய்வது அரைவேக்காடுதனம். அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம், கட்சி கொடியை போட்டுச்செல்லக்கூடாது” என்றார்.
மகாமகம் சம்பவத்தில் உயிழப்பை குறிப்பிட்டு ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைப்பது தொடர்பான கேள்விக்கு...
“அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு) அந்த நிகழ்ச்சிக்கு யாரையும் அழைக்கவில்லை. அது ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. ஆனால் இவர்கள் அரசு இணையதளம், ஊடங்களில் விளம்பரங்கள் கொடுத்து அனைவரையும் வரவழைத்து சாகடித்துள்ளார்கள். அதை இதனுடம் ஒப்பிட முடியுமா? 15 லட்சம் பேர் வருவார்கள் என தெரிந்தும் அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, முடிந்த கதையை பேசுகிறார்கள். 2026ல் இது பிரதிபலிக்கும்” என்றார்.