அ.தி.மு.க. விவகாரம் தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய, சசிகலா மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் வழங்கும் என தெரிகிறது.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் மற்றும் பெயர் விவகாரத்தில், ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார அவகாசம் கேட்டு, சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா அணிக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படுமானால், ஒ.பன்னீர்செல்வம் அணிக்கும் சிறிய அளவிலான அவகாசம் வழங்கப்படும் என்றும், தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளுக்கும் அவகாசம் வழங்கப்பட்ட பிறகு, இரட்டை இலை சின்னம் மற்றும் பெயர் தொடர்பான விசாரணை எப்போது என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என்று தெரிகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் விவகாரம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லுமா? செல்லாதா? என்ற முக்கிய பிரச்னையும் தேர்தல் ஆணையத்தின் முன் இருக்கிறது.