’லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.. மோதல் வெடிக்கும்’.. நீதிமன்ற விசாரணையில் பரபரப்பு!

’லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.. மோதல் வெடிக்கும்’.. நீதிமன்ற விசாரணையில் பரபரப்பு!
’லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.. மோதல் வெடிக்கும்’.. நீதிமன்ற விசாரணையில் பரபரப்பு!
Published on

அதிமுக கட்சி பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை  ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில்,  வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்ய மனு, நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால், பொதுக்குழுவை எதிர்த்த மனுவை விசாரிக்கக்கோரிய மனு காலாவதியாகி விட்டதாக கருத வேண்டுமென வாதிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் சூரியமூர்த்தி தரப்பில் பதட்டமான சூழலில் பொதுக்குழு கூடுவதால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் என்றும், இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக கட்சி தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில்  கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது. அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை (ஜூன் 21) தள்ளிவைத்தார்.

இதையும் படிக்கலாம்: ‘தலைமையேற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்‘ - மதுரையில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com