ரூ.6 கோடி பணம் கையாடல் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்ணா தொழிற்சங்கத் செயலாளராக இருந்த சின்னசாமி, சங்கப் பணம் சுமார் ரூ.6 கோடியை கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. சின்னசாமி மீது அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஜக்கையன் புகார் அளித்தார். தொழிற்சங்கத்தில் பொறுப்பு வாங்கித் தருவதாக இரண்டு பேரிடம் 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, சின்னசாமி ஏமாற்றி விட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கோவையில் இருந்த சின்னசாமியை நேற்று கைது செய்தனர்.
சின்னசாமியை சென்னை அழைத்து வந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜூ முன்பு அவரை ஆஜர்படுத்தினர். புகார் தொடர்பாக விசாரித்த பின்னர், சின்னசாமியை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து சின்னசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சின்னசாமி தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.