கல்லூரி விரிவாக்கத்திற்காக லஞ்சம் கொடுத்து கடன் பெற்ற வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி.கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் போன்றது ஊழல் என்றும் அதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
கண்ணம்மா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது விண்ணப்பத்தை பரிசீலிக்கும் மேலாளர் தியாகராஜன், குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதற்காக விமான கட்டணமாக சுமார் இரண்டரை லட்ச ரூபாயை கே.என்.ராமச்சந்திரனிடம் பெற்றுக்கொண்டு, 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 2015/ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த வழக்கை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
விமான செலவை லஞ்சமாக பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு அபராதத்துடன் 5 ஆண்டு சிறை தண்டனையும், கடன் பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.