மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் அதிமுகவின், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான ஆலோசனைக்கூட்டம் துவங்கியுள்ளது.
அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் உள்ளனர்.
மேலும் மக்களவை தேர்தலில், தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதிமுகவை பொறுத்தவரை 25-28 நாடாளுமன்ற தொகுதிகளில் அவர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய நிலவரப்படி பெரிய கட்சிகள் எதுவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாக எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. மேலும் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக பரப்புரை , விளம்பர குழுக்களின் ஆலோசனையும் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.