மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக!

மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக!
மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக!
Published on

மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 27 மாவட்டங்களில் நடத்தப்பட்ட மறைமுகத் தேர்தலில் அதிமுக 14 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளது. துணைத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை இரு அணிகளும் தலா 13 இடங்களை கைப்பற்றியுள்ளன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் வாக்களித்து நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதே மறைமுகத் தேர்தல். அதன்படி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 27 மாவட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அந்தந்த மாவட்ட ஊராட்சித் தலைவரை அதாவது மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை தேர்வு செய்துள்ளனர்.

27 மாவட்டங்களில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் தலா 13 மாவட்டங்களில் அதிக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களை பெற்றிருந்த நிலையில், சிவகங்கையில் மட்டும் இரு கட்சிகளும் தலா 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களை பெற்றிருந்தன. இந்நிலையில், திமுக வசமிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம், 14 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை அதிமுக பிடித்துள்ளது.


புதுக்கோட்டையில் உள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில், திமுக கூட்டணி 13 உறுப்பினர்களை பெற்று முன்னிலையில் இருந்தது. அதிமுக கூட்டணி 9 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் திமுக கூட்டணியினர் மாற்றி வாக்களித்ததாக தெரிகிறது. இதனால், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலட்சுமி 12 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன்முலம் அதிமுக 14 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளது. 13 மாவட்டங்களில் முன்னிலையில் இருந்த திமுக புதுக்கோட்டை மாவட்டத்தை இழந்து, 12 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை அதிமுக, திமுக இரு அணிகளும் தலா 13 இடங்களை பிடித்தன. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் உமாமகேஸ்வரி கைப்பற்றினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com