பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி ஆகிய இடங்களில் சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது. இரு பகுதிகளிலும் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் பொன்பரப்பி, பொன்னமராவதியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமான அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ''சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அமைதிகாக்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் வீடியோ பரவியது. அதனை வெளியிட்ட நபர்களை கைது செய்யக்கோரி பெரிய போராட்டம் நடைபெற்று பதட்டம் நிலவியது. சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.