தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணிகள், துண்டு பிரசுரம் விநியோகம் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்
இந்த வருடம் மார்ச் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இணைந்து தெரிவித்துள்ளன.
“5 வயது நிறைவடைந்த குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
5 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை தவிர்க்க அனைத்து குழந்தைகளின் விவரங்கள் அடிப்படையில் அவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள் விநியோகிக்க வேண்டும். அதேபோன்று அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடத்திட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாகவும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்து.
கோடை விடுமுறைக்கு முன்பாகவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பணிகளைப் பிரித்து வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.