மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட அலுவலக கட்டுமான பணிகளுக்காக மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தநிலையில், இன்று அலுவலக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து முதற்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வருகின்ற 2026ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடையும் என அறிவித்திருந்தது. ஆனாலும் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொதுப்பணித்துறை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட அலுவலகம் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் எய்ம்ஸ் அமைய உள்ள பகுதியில் திட்ட அலுவலகத்திற்கான கட்டிடம் அமைக்க ஏதுவாக இல்லாத நிலையில், அதன் அருகே உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனையின் அருகே இருக்கும் பழைய கட்டிடம் ஒன்றை சீரமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. இந்த சீரமைப்பு பணிகளுக்காக 2 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரத்து 487 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டுமான பணிகளுக்காக 1 கோடியே 57 லட்சத்து 1 ஆயிரத்து 115 ரூபாயும், மின் இணைப்பு பணிகளுக்காக 59 லட்சத்து 71 ஆயிரத்து 372 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்ட அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் இன்று துவங்கி உள்ளது. மற்றும் மேற்கண்ட சீரமைப்பு பணிகள் அனைத்தும் 180 நாட்களுக்குள் நிறைவேறும் என மத்திய பொதுப்பணி துறையின் ஒப்பந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மத்திய பொதுப்பணித் துறை அறிவிப்பின் வாயிலாக அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, அதன் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜப்பான் நிறுவனமான ஜைகா 82 விழுக்காடு நிதியை வழங்குகிறது. அதாவது, ஜைகா நிறுவனம் ரூ.1621.8 கோடியும், மீதமுள்ள 18 சதவிகித நிதியை மத்திய அரசும் வழங்க உள்ளது. இதன் மூலம் மதுரை மக்களின் நீண்டகால் கோரிக்கை நிறைவேறுவதற்கான முதல் பணி இன்று தொடங்கியுள்ளது.