அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
அனிதாவின் மரணம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. குழுமூர் சென்ற தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் முருகன், அனிதாவின் குடும்பத்தினரிடமும், ஊர் மக்களிடமும் விசாரணை நடத்தினார். அவருடன் ஆதிராவிட நலத்துறை இயக்குனர் மதியழகன், முதுநிலை விசாரணை அதிகாரிகள் இனியன் விஸ்டர் ஆகியோரும் விசாரித்தனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் குமார் ஆகியோர் உடனிருந்தனர். மாணவி அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ’மாணவி அனிதா மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.