கமுதி அருகே இயங்கி வரும் அதானி நிறுவனம், சோலார் மின்தகடுகளை கழுவ பெருமளவு குடிநீரை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாட்டின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அதானி நிறுவனம் நிறுவியுள்ளது. இதற்காக அங்கு நிறுவப்பட்டுள்ள சோலார் தகடுகளைக் கழுவி சுத்தம் செய்ய அதானி நிறுவனம் குடிநீரை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, குடிநீரைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகமும் கடந்த ஆண்டு தடை விதித்திருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அதானி நிறுவனம் தனி நபர் சிலரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் நீரை எடுத்து சூரியமின் தகடுகளை சுத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராமநாதபுர மாவட்ட மக்கள் குடிநீரின்றி தவித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதானி நிறுவனம் தங்கள் நிலங்களை கையகப்படுத்திய போது கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.