தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னத்திரை நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு அவர் காதலர் காந்தி லலித்குமார் வந்தார். உதவி இயக்குனராக பணியாற்றி வந்த காந்தி, திருவண்ணாமலையை சேர்ந்தவர். கணவரை பிரிந்து வாழும் நிலானியும் அவரும் பழகி வந்துள்ளனர். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி நிலானியை அவர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படப்பிடிப்பில் அவர் தகராறு செய்தாராம். இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார்.
இதற்கிடையில் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.