“இங்கு விடப்படுகிற ஒவ்வொரு கண்ணீரும் உள்மனதில் இருந்து வருவது” - குஷ்பூ கண்ணீர்

நடிகையும் தேசிய மகளிரணி உறுப்பினருமான குஷ்பூ விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

விஜயகாந்த்
விஜயகாந்த்ட்விட்டர்

இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தன் கணவர் சுந்தர் சி உடன் சென்று, விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

குஷ்பூ
🔴LIVE | RIP Vijayakanth |சென்று வாருங்கள் கேப்டன்! அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “விஜயகாந்தை இழந்தது எங்கள் வீடுகளில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போதும், அவரது வீட்டிற்கு எதிரே சாலிகிராமத்திலும் சிலகாலம் இருந்துள்ளேன். அவர் இருந்தாலே நமக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு இருக்கும். கேட்பதற்கும், பார்த்துக்கொள்வதற்கும் தைரியம் சொல்வதற்கும் ஒருத்தர் இருக்கிறார் என்ற உணர்வை விஜயகாந்த் எப்போதும் கொடுப்பார். அவர் நம் மத்தியில் இல்லை என நான் நினைக்க மாட்டேன். ஏனெனில் எல்லோர் மனதிலும் அவர் எப்போதும் இருப்பார்.

எப்போதும் ஒருவர் இருக்கும்போது அவரது அருமை நமக்கு புரியாது. அவர் போனபிறகுதான் அருமை தெரியும். இந்த கூட்டம் மாபெரும் நடிகருக்கோ அரசியல் தலைவருக்கோ இல்லாமல் நல்ல மனிதருக்காக வந்துள்ளது. திரையுலகு மட்டுமல்ல, வெளியில் யாரிடம் கேட்டாலும் நல்ல மனிதர் என்றால் விஜயகாந்தினைத்தான் சொல்வோம். இங்கு விடுகிற ஒவ்வொரு கண்ணீரும் உள்மனதில் இருந்து விடுகிற கண்ணீர்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com