சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, பிராமணர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நிகழ்ந்துவருவதாகவும், பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள் என ஆவேசமாக பேசினார்.
அப்போது பேசிய அவர், “காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலையல்ல, தமிழ்நாட்டில் பல பத்தாண்டுகளாக இனப்படுகொலை நடக்கிறது. பிராமணர்களின் உணர்வை அழிப்பதும் இன அழிப்புதான். பிராமணர்கள் இல்லை என்றால் யார் இறுதி காரியங்கள் செய்வார்கள் என்ற கவலை இப்போது பலருக்கு எழுந்துள்ளது. கடவுள் மறுப்பும், பிராமண எதிர்ப்பும் இங்கு திராவிடக் கொள்கையாக இருக்கிறது. பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள்? அப்படியானால் தமிழ்நாட்டில் ஏன் தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒன்று தொடங்கப்படாமல் இருக்கிறது?
யார் வந்தேறிகள்? தமிழ்நாட்டின் ஆதிகுடிகளைவிட தெலுங்கர்கள்தான் அமைச்சரவையில் அதிகம் இருக்கின்றனர். திராவிடர்கள் பற்றி பேசினால் ஆந்திராவில், யார் திராவிடர்கள் என்று கேட்கிறார்கள். பிராமணர்களின் உரிமைகளை இழக்காமல் இருந்தால் போதும்” என்று ஆவேசமாக பேசினார்.
இதில் தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி பேசியது சர்ச்சையாக வெடித்தது.
சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில், “தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக திமுகவினர் போலிச் செய்திகளை பரப்பி வருகின்றனர்” என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கமளித்துள்ள நடிகை கஸ்தூரி, வெறுப்பு அரசியலை பின்பற்றும் மோசடி திராவிட அரசியலின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலேயே தான் பேசியதாக கூறியுள்ளார்.
மேலும் “இந்து விரோத பொய்யர்கள் திடீரென்று சனாதனி தெலுங்கு தலைவர்களை சமூக வலைத்தளத்தில் டேக் செய்து பதிவிட்டுள்ளது மிகப்பெரிய நகைச்சுவை” என்றும் விமர்சித்துள்ளார்.
திமுகவினர் பரப்பும் பொய்ச் செய்திகளை தெலுங்கு ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மற்றும் தெலங்கானா மக்கள் ஒருபோதும் பொய் வலையில் விழமாட்டார்கள் என தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, தமது குடும்பத்தினரும் தெலுங்கர்கள்தான் என்றும் தெலுங்கு மீதான எனது அன்பையும், விசுவாசத்தையும் யாரும் அவமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் விளக்கமளித்தது மட்டுமில்லாமல் செய்தியாளர்களை சந்தித்து தெலுங்கர்கள் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் கஸ்தூரி.
அப்போது ஆவேசமாக பேசிய கஸ்தூரி, “ஆதிகுடிகளை விட தெலுங்கர்கள்தான் அமைச்சரவையில் அதிகமாக இருக்கிறார்கள் என்று நான் கூறியதை, ஒருவர் முன்னேறி வருவதை ஏன் குறைகூறுகிறீர்கள் என குற்றஞ்சாட்டுகிறார்கள். பிராமணர்களை பலவிதமாக என கிண்டல் செய்து குறைத்து விமர்சிக்கும் போதெல்லாம் எங்கே போனீர்கள்?
ஒருவர் முன்னேறியதை குறைத்து பேசாதீர்கள் என நீங்கள் சொல்வதைத்தானே பிராமணர்களான நாங்களும் சொல்கிறோம். நாங்கள் முன்னேறிவிட்டோம் என்பதற்காக ஏன் எங்களை தாழ்த்த பார்க்கிறீர்கள்? ஒரு சமூகத்தினரை தமிழர்கள் இல்லை எனக்கூற யாருக்கும் உரிமையில்லை” என்று ஆவேசமாக பேசினார்.