நடிகர் விஷால் ‘மக்கள் நல இயக்கம்’ என்ற பெயரில் புது அமைப்பை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் விஷால் பிறந்தநாளான இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அவர் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் ‘இரும்புத்திரை’படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஷால் “மக்கள் நல இயக்கம்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுக் கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்.
பின் பேசிய விஷால் “திருப்பரங்குன்றம் தேர்தல் வரப்போகிறது. அது நம்ம மண்ணு; நம்ம இடம்” என்று கூறினார். மேலும் நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் முதலமைச்சர் தான் என்றும் கூறினார். நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது. வீதியில் நடக்கும் விசயங்களை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் பிணத்திற்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான். ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. இது அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல; அணியாய் சேர்ந்து அன்பை விதைக்கவே இந்த இயக்கம்.
அப்துல்கலாமை பார்க்கும் போது அறிவு, அன்னை தெரசாவை பார்க்கும் போது அன்பு ஞாபகத்தில் வரும். அதேபோல் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது துணிவு ஞாபகத்திற்கு வரும். நடிகனுக்கு கிடைக்கும் சம்பளம் உங்களுக்கே தெரியும். அப்படியிருக்கும்போது நான் அரசியலுக்கு வரப்போகிறேன். அதையும் தாண்டி வர வைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அவரது கொடியில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.